குமரி அருகே தாமிரபரணி தடுப்பணையில் மூழ்கி இளைஞர் மாயம் - தேடுதல் பணி தீவிரம்!

 
drown

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் தடுப்பணையில் குளித்த இளைஞர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சூரியகோடு சீனிவிளை பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் நிதின். இவர் நேற்றும் மார்த்தாண்டம் அடுத்துள்ள வெட்டுவன்னியில் உள்ள ராணுவத்தில் சேருவதற்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்று விட்டு, சக நண்பர்களுடன்  குழித்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் தடுப்பணைக்கு குளிக்க சென்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமான ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில், நிதின் தனது நண்பர்களுடன் ஆற்றில் இறங்கி குளித்துள்ளார்.

kumari

அப்போது, எதிர்பாராத விதமாக அவர் ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாமிரபரணி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தடுப்பணை பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்காததால் வெளியூறை சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.