காதல் திருமணம் 3 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

 
fire

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

கன்னியாகுமரி நாகர்கோவில் அருகே உள்ள மறவன் குடியிருப்பை சேர்ந்தவர் சார்லட். இவரது மகள் லிசா(19). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. 3ஆம் ஆண்டு படித்து வந்தார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் விஷ்ணு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காத நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு லிசா வீட்டில் இருந்து வெளியேறி விஷணுவை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து, அவர்கள் மார்த்தாண்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். 

kumari gh

இந்த நிலையில், திருமணத்துக்கு பின் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் லிசா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 30ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த லிசா தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து லிசா மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை லிசா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து லிசாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமான 3 மாதத்தில் லிசா தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.