சீர்காழி அருகே ஆடையில் தீ பற்றியதில் படுகாயமடைந்த தொழிலாளி பலி!

 
fire

சீர்காழி அருகே ஆடையில் தீப்பற்றியதில் படுகாயமடைந்த துப்புரவு  தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (50). இவரது மனைவி செங்கனி. இவர்கள் இருவரும் திருமுல்லைவாசல் ஊராட்சி மன்றத்தில் துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையான முருகேசன், குடித்துவிட்டு நாள்தோறும் மனைவியிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

mayiladuthurai

இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த முருகேசன், மனைவியை மிரட்டுவதற்காக வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அருகில் எரிந்து கொண்டிருந்த கொசுவத்தியில் இருந்து அவரது ஆடையில் தீப்பற்றியது. மளமளவென உடல் முழுவதும் தீ பரவியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை முருசேகன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.