வெள்ளக்கோவில் அருகே பெண் கடப்பாரையால் அடித்துக்கொலை - கணவர் வெறிச்செயல்!

 
murder

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே மனைவியின் தலையில் கடப்பாரையால் அடித்துக் கொன்றுவிட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள நடுபாளையம் பகுதியை சேர்ந்தவர் குருநாதன் (62). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (55). இவர்களுக்கு 2 மகள்களும், விநாயகன் என்ற மகனும் உள்ளனர். மூத்த மகள் உடல்நல குறைவால் உயிரிழந்த நிலையில், மற்ற 2 பிள்ளைகளும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். குருநாதன் உடல்நல குறைவால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால், பூங்கொடி மேலக்கவுண்டன் வலசு பகுதியில் உள்ள நூல் மில்லில் பணிபுரிந்து வந்தார். 

tiruppur

இந்த நிலையில், வீடு தொடர்பாக குருநாதனுக்கும், அவரது மனைவி பூங்கொடி மற்றும் மகன் விநாயனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மகன் வீட்டிற்கு வருவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று  இரவு திடீரென பூங்கொடிக்கும், குருநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனை அறிந்த, மகன் விநாயகன் அவர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால், ஆத்திரம் அடங்காத குருநாதன் வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து பூங்கொடியின் பின் தலையில் பலமாக தாக்கினார். 

இதில், மூளை சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில், வெள்ளகோவில் போலீசார், பூங்கொடியின் உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மகன் விநாயகன் அளித்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குருநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.