மானாமதுரை அருகே கார் கவிழ்ந்து விபத்து - சிறுமி உள்பட இருவர் பலி!

 
accident

மானாமதுரை அருகே கார் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் கோவையை சேர்ந்த சிறுமி உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே டி. நெடுங்குளத்தை சேர்ந்தவர் பாண்டி (45). இவர் கோவையில் உணவகம் நடத்தி வருகிறார். இதேபோல், மானாமதுரை அருகேயுள்ள தெற்குச்சந்தனூர் கிராமத்தை சேர்ந்த சிலரும் கோவையில் உணவகம் நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை இளையான்குடி  அருகேயுள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் புறப்பட்டு சென்றனர்.

accident

காரை கோவையை சேர்ந்த குமார் என்பவர் ஓட்டிச்சென்றார். மானாமதுரை அருகேயுள்ள மாங்குளம் விலக்கு அருகே சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே நாய்  வந்ததுள்ளது. அதன் மீது மோதல் இருக்க  ஓட்டுநர் முயன்றபோது எதிர்பாராத விதமாக கார் நிலைதடுமாறி கவிழ்ந்து சாலையோரத்தில் இருந்த கால்வாய் பாலத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாண்டி,  கோவை சேரன் மாநகரை சேர்ந்த ஆர்த்தி (17) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், விபத்தில் பலத்த காயமடைந்த பெண்கள் உள்ளிட்ட 8 பேர் மானாமதுரை  மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த மானாமதுரை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.