நாகர்கோவில் வியாபாரியிடம் துணி வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி - இருவர் கைது!

 
arrest

நாகர்கோவிலை சேர்ந்த வியாபாரியிடம் மலிவு விலைக்கு துணி வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் பண மோசடி செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் தார்வீஸ் மீரான் (39). துணி வியாபாரியான இவர் ஈரோட்டுக்கு வந்து துணிகளை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து மீண்டும் ஊருக்கு சென்று வியாபாரம் செய்வது வழக்கம். இதற்காக மீரான் ஈரோட்டில் தனியார் விடுதியில் தங்குவது வழக்கம். இந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த சலீம் என்பவர் மீரானுக்கு அறிமுகமாகி உள்ளார். அப்போது, சலீம் தன்னிடம் துணிகள் குறைந்த விலையில் இருப்பதாகவும், அதை உங்களுக்கு கொடுப்பதாகவும் மீரானிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளார். 

police

இதை உண்மை என நம்பி மீரான் ரூ.3 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட சலீம், சொன்ன படி துணிகளை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். சலீமுக்கு உதவியாக அவரது நண்பர் உமர்செரீப் என்பவரும் இருந்தார். இதையடுத்து, தான் ஏமாற்றப்படுவதை அறிந்த மீரான் இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சலீம் மற்றும் அவரருக்கு உடந்தையாக இருந்த உமர் செரீப்பை கைது செய்தனர்.