கோவையில் இறந்தவர் இலங்கை தாதா அங்கொட லொக்கா தான்... டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி!

 
ankatalokka

கோவையில் உயிரிழந்தது இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காதான் என்று டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.

இலங்கையில் நிழல் உலக தாதாவாக இருந்த அங்கொட கொலக்கா, கோவை சேரன் மாநகர் பகுதியில் பிரதீப் சிங் என்ற பெயரில், தனது காதலி அம்மானி தான்ஜி உடன்  கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ரகசியமாக வசித்து வந்தார்.இந்த நிலையில், திடீர் உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்ட அங்கொட லொக்கா, கடந்த 2020 ஜுலை 4ஆம் தேதி உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் போலி சான்றிதழ் கொடுத்து அவரது உடலை பெற்றுச்சென்று மதுரையில் தகனம் செய்தனர்.

ankatalokka

இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணையில் இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, சடலத்தை எரிக்க உதவிய மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிவகாமி சுந்தரி, திருப்பூரை சேர்ந்த தியானேஷ்வரன் ஆகியோரை கைது செய்தனர். அம்மானி தான்ஜி முகாமில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற இருவரும் பிணையில் வெளியே உள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை முடிவில் அவரது மரணம் இயற்கையானது தான் என தெரியவந்தது. 

police

மேலும், உயிரிழந்த நபர் அங்கொட லொக்காதான் என்பதை உறுதி செய்வதற்காக இலங்கையில் உள்ள அவரது தாயார் சந்திரிகாவின் டிஎன்ஏ மாதிரிகளுடன்,  உயிரிழந்த அங்கொட லொக்காவின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒப்பீடு செய்து பார்க்கப்பட்டது. அப்போது, உயிரிழந்த நபர் அங்கொட லொக்காதான் என முடிவுகள் வெளியாகி உள்ளது. உயிரிழந்தது அங்கொட லொக்கா தான் என்றும், அவரது இறப்பில் சந்தேகம் இல்லாததாலும் வழக்கை முடிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கை முடிக்க மனுத்தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.