குமாரபாளையத்தில் ஜவுளிக்கடை ஊழியர் அடித்துக்கொலை - அண்ணன், தம்பி கைது!

 
dead

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜவுளிக்கடை ஊழியரை அடித்துக்கொன்று உடலை காவிரி ஆற்றில் வீசிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தம்மண்ணசெட்டி தெருவை சேர்ந்தவர் அரவிந்தன் என்கிற தினேஷ்வரன்(25). இவர் திருப்பூரில் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி திருமண நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், இதுகுறித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

namakkal

அப்போது, சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த  வெங்கடேஷ் மற்றும் அவரது சகோதரர் கிருஷ்ணராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது மனைவியிடம் அரவிந்தன் தவறாக நடந்து கொண்டதால் ஆத்திரத்தில் இருவரும் அடித்துக் கொன்று உடலை காவிரியில் வீசியது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலையான அரவிந்தனும், வெங்கடேஷும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், வெங்கடேஷின் மனைவி தனியாக இருந்தபோது அவரிடம் அரவிந்தன் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதனை அறிந்த அரவிந்தன், அவரது தம்பி கிருஷ்ணராஜ் ஆகியோர், அரவிந்தனிடம் இதுகுறித்து கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது, வெங்கடேஷ் மற்றும் கிருஷ்ணராஜ் தாக்கியதில் படுகாயமடைந்த அரவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனை அடுத்து,  அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி பழையபாளையம் காவிரி ஆற்றில் கொண்டு வீசியது தெரியவந்தது. இதனை அடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீசார், காவிரி ஆற்றில் வீசப்பட்ட உடலை படகுகள் மூலம் தேடி வருகின்றனர்.