பெருந்துறை அருகே பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்... மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை!

 
suspend

பெருந்துறை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைதான உயிரியல் ஆசிரியரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு உள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுல்லிப்பாளையம் கூட்டுறவு நகரைச் சேர்ந்தவர் திருமலை மூர்த்தி(49). இவர் பெருந்துறை அருகே உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு உயிரியல் பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், திருமலை மூர்த்தி பள்ளி மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், மாணவர்களை தொட்டு பேசுவதும், ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவிகளை நடனம் ஆட சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் சைல்டுலைன் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியர் அத்துமீறல் குறித்து மாணவிகள் தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஞானசேகரன் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில், ஆசிரியர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் திருமலைமூர்த்தி மீது போக்சோ  சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

sexual abuse

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பே ஆசிரியர் திருமலைமூர்த்தி மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் பள்ளி தலைமையாசிரியர் கணேசனிடம் புகார் செய்திருந்தனர். ஆனால் தலைமையாசிரியர் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமல் இருந்துள்ளார். இதையடுத்து, நேற்று நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் பெற்றோர்களுடன்  பள்ளிக்குச் சென்று  தலைமையாசிரியர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பள்ளியை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து சீனாபுரம் மூன்று ரோடு பகுதியில் மாணவ -மாணவிகள் பெற்றோர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருந்துறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையாசிரியர் கணேசனை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து மாணவ- மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்த நிலையில், இன்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதான உயிரியல் பாட ஆசிரியர் திருமலை மூர்த்தியை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.