ஆம்புலன்ஸ் இல்லாததால் ஓட்டுநர் மரணம்... பாரத் பெட்ரோலியம் நிர்வாகத்தை கண்டித்து டேங்கர் லாரி ஓட்டுநர்கள் போராட்டம்!

 
karur

கரூரில் பாரத் பெட்ரோலியம் நிர்வாகம் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததால் டேங்கர் லாரி ஓட்டுநர் உயிரிழந்தாக குற்றம்சாட்டி, 500-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரி ஓட்டுநர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கரூர் அடுத்த ஆத்தூரில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்கு உள்ளது. இங்கிருந்து நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் திருச்சி, கரூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு எரிபொருள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரியலூரை சேர்ந்த செல்வமணி என்பவர் தனது ஓட்டுநருடன் எரிபொருள் எடுக்க டேங்கர் லாரியில் வந்துள்ளார். வரும் வழியில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து ஓட்டுநர் பாரத் பெட்ரோலியம் அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு, செல்வமணியை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் அனுப்பும் படி கூறி உள்ளனர்.

 ஆனால், அதிகாரிகள் தங்களிடம் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், தனியார் ஆம்புலன்சுகளுக்கு தகவல் அளித்த நிலையில், அதற்குள்ளாக கிளீனர் செல்வமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சக டேங்கர் லாரி ஓட்டுநர்கள், பாரத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளின் அலட்சியத்தால் கிளீனர் செல்வமணி உயிரிழந்து விட்டதாக குற்றம்சாட்டி எரிபொருள் கிடங்கு அருகே சடலத்துடன் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

karur

அப்போது, டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்கு முதலுதவி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்று குற்றம்சாட்டிய ஓட்டுநர்கள்,  நெஞ்சுவலி ஏற்பட்டது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தபோது நிறுவனத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் இருந்தும் ஓட்டுநர் இல்லை என்று அனுப்ப மறுத்துவிட்டதாகவும், இதனால் முக்கால் மணிநேரம் கழித்து தனியார் ஆம்புலன்ஸ்கள் வந்த நிலையில் அதற்குள்ளாக செல்வமணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், உயிரிழந்த செல்வமணிக்கு 4 பிள்ளைகள் உள்ளதாகவும், அவரது குடும்பத்திற்கு பாரத் பெட்ரோலிய நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.