அரியலூர் அருகே அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - தமிழாசிரியர் கைது!

 
arrest

அரியலூர் அருகே அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தமிழாசிரியர் போக்சோ சட்டத்தில் கைதான நிலையில், சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாக பள்ளியின் தலைமை ஆசிரியையும் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் காட்டுபிரிங்கியம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு உடையார்பாளையம் அருகே உள்ள பிலிச்சுக்குழி பகுதியை சேர்ந்த அருள்செல்வன் என்பவர் தமிழ் ஆசிரியர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று  முன்தினம் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரியிடம் புகார் அளித்துள்ளார்.

sexual abuse

மேலும், இந்த விவகாரம் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களுக்கு தெரியவந்த நிலையில், அவர்கள் தமிழாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அரியலூர் டிஎஸ்பி மதன் தலைமையிலான போலீசார் பாலியல் புகாருக்கு உள்ளான தமிழாசிரியர் அருள்செல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தமிழ்செல்வன் கடந்த மாதம் அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததும் தெரியவந்தது. 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்த நிலையில், தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, காட்டுபிரிங்கியம் அரசுப்பள்ளியில் அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரைமுருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.