திருப்பூரில் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு... தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினர்!

 
swine

திருப்பூரில் 44 வயது ஆணிற்கு பன்றிக் காய்ச்சல் தொற்று  உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டனர். 

திருப்பூர் 15 வேலாம்பாளையம்  சோளிபாளையம் கே.ஆர்.சி கீர்த்தனா  நகரை சேர்ந்த 44 வயது நபர் ஒருவர் காய்ச்சல் காரணமாக கடந்த 13ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஹெச்1என்1 எனப்படும் பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அவருக்கு மருத்துவனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் 4 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதும், அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சுகாதாரத்துறை சார்பில் அந்த பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு சளி - காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

tiruppur

இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் தெரிவித்தாவது,  கடந்த 13ஆம் தேதி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற ஒருவருக்கு ஹெச்1 என்1 பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சுகாதாரமாக இருப்பதுடன் எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என கூறினார். திருப்பூரில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில், தற்போது பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.