வால்பாறை அருகே மலைப்பாதையில் திடீர் பள்ளம் - போக்குவரத்து பாதிப்பு

 
valparai

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் ஆழியாறு சோதனைச்சாவடி அருகே சாலையின் நடுவே ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி அருகே இன்று காலை 8 மணி அளவில் சாலையின் நடுவே திடீரென 2 இடங்களில் பள்ளம் ஏற்பட்டது.  

valparai

இதனை அடுத்து, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.  நெடுஞ்சாலைத்துறையினர்  லாரிகள் மூலம் மண்ணை கொண்டு வந்து அவற்றை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பள்ளத்தில் கொட்டி மூடப்பட்டன. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பணி காலை 11 மணிக்கு நிறைவடைந்தது. இந்த பணியால் வால்பாறை மற்றும் பொள்ளாச்சியில் இருந்து வந்த பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

பொதுமக்கள் சாலையில் நடந்து சென்று  சாலையின் இருபுறமும் நின்றிருந்த பேருந்துகளில் ஏறிச்சென்றனர்.  இதனிடையே, தொடர் மழையால் மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டுமென வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.