"மழைநீர் தேங்கியுள்ள குடியிருப்பு பகுதிகள் முன்பு என்னவாக இருந்தது என ஆய்வு" - அமைச்சர் முத்துச்சாமி

 
erode

மழைநீர் தேங்கி நிற்கும் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் முன்பு என்னவாக இருந்தது என ஆய்வுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு அடுத்த சித்தோட்டில் பூங்கா சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்ட நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்தறை அமைச்சர் முத்துசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் பெய்த பெருமழையின் காரணமாக வெள்ளநீர் வடியாமல் உள்ளதற்கு குளம், ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் காரணமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் முத்துச்சாமி, வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு சட்டத்துக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும், அதனை செம்மைப்படுத்தவும் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள் முன்பு என்னவாக இருந்தது என்பது குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.  

muthusamy

தற்பொழுது புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு வழங்கப்படும் அனுமதிகள் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு வழங்கப்படுவதாக கூறிய அமைச்சர் முத்துச்சாமி, பழைய கட்டிடங்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.முன்னதாக,பெருந்துறையில் வருவாய்த் துறையின் சார்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு 330 பயனாளிகளுக்கு ரூ.39.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்கான நலத் திட்ட உதவிகள் வழங்குவது தினசரி அதிகாரிகள் மூலம் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருவதாகவும், பொதுமக்களை சந்திக்கின்றபோது சாக்கடை, தண்ணீர், சாலை மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை கேட்டு மனுக்களை அளிக்கின்றனர். இவை அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.