மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை... கோவை அரசுக்கல்லூரி பேராசிரியர் கைது!

 
sexual

கோவை அரசு கலை கல்லூரியில் மாணவிக்கு பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்ட புகாரில் பேராசிரியர் ரகுநாதனை பந்தய சாலை போலீசார் கைது செய்தனர்.

கோவை அரசுக் கலைக் கல்லூரியில் பிபிஏ துறை தலைவரா பணிபுரிந்து வருபவர் பேராசிரியர் ரகுநாதன். இவர் துறை மாணவியிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தத்தில் சாட் செய்வதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கடந்த சனிக்கிழமை கல்லூரி முதல்வர் மீது புகார் அளித்த நிலையில், புகார் மீது எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. 

cbe

இதனை அடுத்து,  நேற்று முன்தினம் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பேராசியர் மீது புகார் அளித்தனர். அப்போது, பேராசிரியர் மாணவியிடம் இரட்டை அர்த்தத்தில் சாட் செய்த ஸ்கிரீன் ஷாட்களையும் ஆட்சியரிடமும் வழங்கினர்.  இதனை தொடர்ந்து, நேற்று காலை பேராசிரியர் ரகுநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி, இதுகுறித்து கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில்,  போலீசார் பேராசிரியர் ரகுநாதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் பள்ளி ஆசிரியர் பாலியல் வன்கொடுமை அளித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்த சம்பம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பாலியல் புகாரில் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.