மாணவிகள் பாலியல் புகார் விவகாரம்... நர்சிங் கல்லூரியை அரசு ஏற்று நடத்தக்கோரி மாணவர்கள் சாலை மறியல்!

 
student

மாணவிகளுக்கு தாளாளர் பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் சீல்வைக்கப்பட்ட சுரபி நர்சிங் கல்லூரியை தமிழக அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி, திண்டுக்கல் ஆட்சியர் வீட்டின் அருகே கல்லூரி மாணவ, மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திண்டுக்கல் அடுத்த முத்தனம்பட்டியில் செயல்பட்டு வரும் சுரபி நர்சிங் கல்லூரியில் படிக்கும் விடுதி மாணவிகளுக்கு, கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன் என்பவர் பாலியல் தொல்லை அளித்தாக புகார் எழுந்தது. இதனை அடுத்து, ஜோதிமுருகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, மாணவிகள் அளித்த புகாரின் பேரில், கல்லூரி தாளாளர் ஜோதி முருகன், விடுதி வார்டன் அச்சனா ஆகியோர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விடுதி வார்டன் அச்சனா கைதாகிய நிலையில், தலைமறைவான ஜோதி முருகனை , 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 

மேலும், கல்லூரிக்கு சீல்வைத்தனர். இந்த நிலையில், நேற்று ஜோதிமுருகன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நீதிமன்றத்தில் தாளாளர் ஜோதி முருகன் சரணடைந்தார். இதனிடையே, சீல்வைக்கப்பட்ட நர்சிங் கல்லூரியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் இல்லத்தின் முன்புள்ள சாலையில் அமர்ந்து திடீரென மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

dindigul

அப்போது, நர்சிங் கல்லூரியை ஜோதி முருகனின் உறவினர்கள் மீண்டும் திறந்து நடத்த முயற்சிப்பதாகவும் எனவே, தமிழக அரசு உடனடியாக கல்லூரியை ஏற்று நடத்த முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், இதற்காக தமிழக அரசு மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் எனவும், அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் கல்லூயை ஏற்று நடத்த முன்வர வேண்டும் என்றும் கூறினர். 

மேலும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், தொடர்புடைய மேலும் மூவர் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்யவும், கல்லூரியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு  உரிய பாதுகாப்பு வழங்கவும், அவர்களது சான்றிதழ்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் காரணமாக திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.