பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை... புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

 
rape

திண்டுக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை  தொடர்பான புகார்களை தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ் அப் எண்ணை மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்)-ன் படி பாலியல் வன்முறையை செய்தவர், தவறு இழைத்தவர் என கருதப்படுபவர். அவர்களே தண்டனைக்கு உரியவர்கள் மற்றும் சட்டப்படி குற்றவாளிகள் ஆவர். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில்  உள்ள பெண் குழந்தைகள் பாலியல் வன்முறை ஏதேனும்  நடக்கும் பட்சத்தில் எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி  உரிய அரசுத்துறையிடம் அல்லது தாயிடமோ மற்றும் நம்பிக்கைக்குரியவர்களிடத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

பாலியல் வன்முறை உங்களுக்கு நிகழ்ந்தால் நீங்கள் அச்சப்பட தேவையில்லை. மனவேதனையடைந்து உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவோ அல்லது தற்கொலை என்ற தவறான முடிவுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். உங்களுக்கு தேவையான ஆலோசனை பெற முயற்சி செய்ய வேண்டும். 

whatsapp

உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கோ அல்லது உங்கள் தோழிகளுக்கோ ஏதேனும் பாலியல் வன்முறை நிகழ்ந்தால் குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்ட (சைல்டு லைன்) இலவச அவசர தொலைபேசி எண் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மேலும், எவ்வித தயக்கமும் இன்றி மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாட 75988 66000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மற்றும் குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) அனுப்பலாம். மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக  தொலைபேசி எண். 0451 - 2460725, 2904070 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். புகார் அளிப்பவரின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும்.

இத்தகவலை நீங்கள் அறிந்து கொண்டு, தங்களது நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டு நம் திண்டுக்கல் மாவட்டத்தை குழந்தைகளுக்கான பாதுகாப்பு மிகுந்த மாவட்டமாக உருவாக்க அனைவரும் இணைந்து செயலாற்றுவோம் என ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.