மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... கல்லூரி தாளாளர் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

 
protest dgl

திண்டுக்கல் அருகே தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, கல்லூரி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள முத்தனம்பட்டியில் சுரபி நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் தாளாளராக ஜோதி முருகன் என்பவர் இருந்து வருகிறார். இந்த கல்லூரி விடுதியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.  இந்த நிலையில், விடுதி மாணவிகளுக்கு, தாளாளர் ஜோதி முருகன் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தாளாளர் ஜோதி முருகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திண்டுக்கல் -பழனி ரயில்வே தண்டவாளம் அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

dindigul

தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களை சமரசம் செய்ய முயன்ற நிலையில், அங்கிருந்து கலைந்து சென்றவர்கள் திடீரென திண்டுக்கல் - பழனி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு விரைந்த திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி சீனிவாசன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.  இதனை அடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனிடையே புகாருக்குள்ளான கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன், அமமுக சார்பில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பதும், திரைப்படஙகளிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.