சிறுமிக்கு பாலியல் தொல்லை... பெயிண்டர் தலையில் கல்லைபோட்டு படுகொலை!

 
Murder

தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பெயிண்டரின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூர் வேத கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கோபால் (52). இவர் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில், கோபால் தனது வீட்டின் அருகில் வசிக்கும் கிருஷ்ணசாமி என்பவரது 12 வயது மகள் தனியாக இருந்தபோது, அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவருக்கும், கிருஷ்ணசாமி குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. 

tenkasi ttn

இந்த நிலையில், நேற்று கடையநல்லூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள வீட்டில் கோபால் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணசாமியின் உறவினர்கள் புளியங்குடி சிந்தாமணியை சேர்ந்த மாரிபாண்டி மற்றும் மேலக்கடையநல்லூரை சேர்ந்த வேலுத்தாய் ஆகியோர், சிறுமி பாலியல் விவகாரம் குறித்து கோபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள், கீழே கிடந்த கல்லை தூக்கி கோபால் தலையில் போட்டனர். இதில் படுகாயமடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனை அடுத்து, மாரிபாண்டி, வேலுதாய் ஆகியோர் அங்கிருந்து தப்பிச்சென்றனர். தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார், விரைந்து சென்று கொலையான கோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக புகாரின் பேரில் கடையநல்லூரி போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகள் மாரிபாண்டி,  வேலுதாய் ஆகியோரை கைது செய்தனர்.