பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

 
rape

கோவில்பட்டி அருகே பள்ளி மாணவியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அரசுப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராக்கையா (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இது நாளடைவில் காதலாக மாறிய நிலையில், கடந்த மாதம் 28ஆம் தேதி சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ராக்கையா கடத்திச் சென்றார். மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், அவரது பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

tuticorin

அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், மாணவி நேற்று வீட்டிற்கு திரும்பினார். அவரிடம் மகளிர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ராக்கையா சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, தலைமறைவாக இருந்த தொழிலாளி ராக்கையாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.