பால் கொள்முதல் செய்து ரூ.50 லட்சம் மோசடி... பொள்ளாச்சி ஜெயராமன் உறவினர் மீது ஆட்சியரிடம் புகார்!

 
pollachi

விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து ரூ.50 லட்சம் பண மோசடி செய்ததாக கூறி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர் மீது பாதிக்கப்பட்டவர்கள், திண்டுக்கல் ஆட்சியர் விசாகனிடம்  புகார் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தமிழர் மறுமலர்ச்சி பேரவை, தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினரான சிவசண்முக பிரதாபன் என்பவர் கோக்கோ லேண்ட் டைரி பார்ம் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனத்தினர் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பால் விற்பனையாளர்களிடம் சில்லறை விலைக்கு மொத்தமாக பால் கொள்முதல் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

dindigul

கொள்முதல் செய்த பாலுக்கு வாரம்தோறும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 வாங்களாக நிலுவைத் தொகை ரூ.50 லட்சத்தை தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறி உள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விற்பனையாளர்கள் நிறுவன உரிமையாளர் சிவசண்முக பிரதாபனிடம் கேட்டபோது, போலீசிடம் சென்றால் தன்னிடம் இருந்து ஒரு பைசா கூட பெற முடியாது என்றும், மீறி செய்தால் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி காலி செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

இதேபோல், அந்த நிறுவனத்தின் கணக்காளர் சத்தியராஜ், கிளை மேலாளர் செல்வகுமார் ஆகியோரும் முறையான பதில் அளிக்காமல், கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியதாகவும், எனவே, பால்கொள்முதல் செய்து நிலுவைத் தொகை ரூ.50 லட்சத்தை வழங்காத கோக்கோ லேண்ட் டைரி பார்ம் நிறுவன உரிமையாளர்  சிவசண்முக பிரதாபன் உள்ளிட்டோர் மீது  சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.