ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சம் இழப்பு... விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

திருப்பூரில் ஆன்லைன் சூதாட்டத்தில் 5 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால் விரக்தியடைந்த பனியன் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

திருப்பூர் பாளையக்காடு ராஜமாதா நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனியார் பனியன் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மீனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.  இந்த நிலையில், சுரேஷ், சொந்த வீடு கட்டுவதற்காக,ரூ.5 லட்சம் சேமித்து வைத்துள்ளார். இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்த அவர், தனது சேமிப்பு முழுவதையும் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.  இதனால் சுரேஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்வில் விரக்தியடைந்த அவர் நேற்று இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

tiruppur

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் எழுதிய கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து விட்டேன் என்றும், அதனால் தனக்கு வாழ தகுதியில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், குடும்பத்தினர் தன்னை மன்னித்து விடுங்கள் என்றும் சுரேஷ் உருக்கமாக கேட்டுக் கொண்டிருந்தார்.  

இதனை அடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், இந்த சம்பவம் குறித்து சுரேஷின் மனைவி மீனா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.