குமரி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ரவுடி வெட்டிக்கொலை - 5 பேர் கும்பல் வெறிச்செயல்!

 
murder

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ரவுடியை வெட்டிக் கொன்ற வழக்கில் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாகர்கோவில் அடுத்துள்ள குஞ்சன்விளையை சேர்ந்த சுந்தர மகாலிங்கம் மகன் தங்க கிருஷ்ணன் (39). இவர் அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சொந்தமாக வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். தங்க கிருஷ்ணன் மீது, சுசீந்திரம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி பட்டியலிலும் அவர் பெயர் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், தங்ககிருஷ்ணன் நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த பிரபு உள்ளிட்டோருன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் தங்க கிருஷ்ணனை அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த தங்க கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

kumari

தகவல் அறிந்த குமரி டிஎஸ்பி ராஜா, சுசீந்திரம் ஆய்வாளர் சாய் லட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தங்க கிருஷ்ணனின் மனைவிக்கு, அதே பகுதியை சேர்ந்த பிரபுவுக்கும் தவறான பழக்கம் இருந்து வந்துள்ளது. இது தங்க கிருஷ்ணனுக்கு தெரிய வந்ததால் அவர் மனைவியையும், பிரபுவையும் கண்டித்துள்ளார்.  மேலும், அவர் பிரபுவை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

இதனை அறிந்த பிரபு, நேற்றிரவு தங்க கிருஷ்ணனை அழைத்துச்சென்று மதுஅருந்த வைத்து, பின்னர் கூலிப் படையினரை வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, கொலையில் ஈடுபட்ட குஞ்சன்விளையை சேர்ந்த பிரபு, அவரது நண்பர்கள் ஜெதீஸ், சுதன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.