3 வேளாண் சட்டங்கள் வாபஸ் - ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

 
cong

மத்திய அரசின் 3 வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ததற்கு வரவேற்பு தெரிவித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, டெல்லியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராடி வந்தனர். இதில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். இந்த நிலையில், நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.  பிரதமரின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

congஇதன் ஒருபகுதியாக, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைதுறை மற்றும்  மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில்  பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தலைவர் ஜெ.சுரேஷ் தலைமையில், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி  இனிப்பு வழங்கி விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். அப்போது, விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் தேசிய தலைவர் சோனியா காந்தி,  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராடியதற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என காங்கிரசார் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர் ஈ. ஆர்.ராஜேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி.எம். ராஜேந்திரன், மாவட்ட  சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே.என்.பாஷா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.