செங்கத்தில் ஜெயலலிதா பெயரிலான கல்வெட்டு அகற்றம்... எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வாக்குவாதம்!

 
chengam

செங்கம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரிலான கல்வெட்டு அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தை கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதை தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதனையொட்டி, அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் ஜெயலலிதா பெயரில் கல்வெட்டு ஒன்றும் வைக்கப்பட்டு இருந்தது.

chengam

இந்த நிலையில், அந்த கல்வெட்டை தற்போது திமுக கூட்டுறவு சங்க தலைவராக உள்ளவர் உடைத்து அப்புறப்படுத்த முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.  இதனை அறிந்த செங்கம் பகுதி அதிமுக நிர்வாகிகள் 15-க்கும் மேற்பட்டவர்கள் வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு திரண்டு, கல்வெட்டு அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஜெயலலிதா பெயரிலான கல்வெட்டை மீண்டும் நிறுவ வேண்டுமென வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனை அடுத்து, கூட்டுறவு சங்க அதிகாரிகள் அகற்றப்பட்ட இடத்திலேயே மீண்டும் ஜெயலலிதா பெயரிலான கல்வெட்டை நிறுவினர். இதனை அடுத்து, அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.