ரகசிய திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ மறுப்பு... காதலன் வீட்டு முன்பு கொட்டும் மழையில் இளம்பெண் தர்ணா

 
tuti

திருச்செந்தூர் அருகே ரகசிய திருமணம் செய்து கொண்டு தன்னுடன் சேர்ந்து வாழ மறுக்கும் காதலனின் வீட்டின் முன்பு இளம்பெண் ஒருவர் கொட்டும் மழையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்து நயினார்பத்து பகுதியை சேர்ந்தவர் விஜயா (26 ). இவர் கல்லூரி படிக்கும் போது, திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் மருதூர்கரையை சேர்ந்த திருமணிகுட்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறி உள்ளது.  5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விஜயாவை, திருமணிகுட்டி திருச்செந்தூர் கோவிலில் வைத்து தாலி கட்டி ரகசிய திருமணம் செய்துள்ளார். மேலும், திருமணம் செய்துகொண்டதை குடும்பத்தினரிடம் தெரிவிக்க  கூடாது எனவும், அவர் விஜயாவிடம் சத்தியம் செய்யும் படி தெரிவித்துள்ளார்.  

tuti

தொடர்ந்து, திருமணிகுட்டியும், விஜயாவும் தங்களது வீட்டிற்கு தெரியாமல் செல்போனில் பேசியும், கணவன் - மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.  இந்த நிலையில், விஜயாவிற்கு திருமண  ஏற்பாடு செய்ததால் அவர் தனக்கு நடைபெற்ற ரகசிய திருமணம் குறித்து வீட்டில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவரது உறவினர்கள்  திருமணிகுட்டியிடம் விசாரித்துள்ளனர்.  ரகசிய திருமணம் குறித்து  விஜயா மற்றவர்களிடம் கூறியதால் ஆத்திரமடைந்த திருமணிகுட்டி, அவரை முறைப்படி திருமணம் செய்ய முடியாது என கூறியுள்ளார். விஜயாவை குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியேற்றிய நிலையில், அவருக்கு அடைக்கலம் கொடுக்கவும் மறுத்துவிட்டார். 

ஆதரவற்ற நிலையில் இருந்த விஜயா, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார்  திருமணிகுட்டியை அழைத்து விசாரித்தனர். அப்போது, அவர் திருமணம் செய்ய மறுத்ததால் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், திருமணி குட்டிக்கு அவரது பெற்றோர்  திருமண ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதனை அறிந்த விஜயா, தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி காதலன் திருமணிகுட்டி வீட்டின் முன்பு கொட்டும் மழையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் அங்கு சென்ற மெஞ்ஞானபுரம் போலீசார் விஜயாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமரசம் அடைந்த அவர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்.