தென்காசி அருகே மாயமான இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்பு

 
dead body

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வீட்டில் இருந்து மாயமான இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள வெள்ளப்பனையேரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமர். தொழிலாளி. இவரது மகள் ராஜேஸ்வரி (21). இவர் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ராஜேஸ்வரி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 21ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வர வில்லை. இதனால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

tenkasi ttn

இதனை அடுத்து, ராமர் மகளை கண்டுபிடித்து தரக்கோரி பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராஜேஸ்வரியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், மேட்டூர் ரயில் நிலையம் அருகே உள்ள விவசாய கிணற்றில் ராஜேஸ்வரி உயிரிழந்த நிலையில் சடலமாக மிதந்தார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, ராஜேஸ்வரி பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.