ரயிலில் தவறவிட்ட 46 பவுன் நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்!

 
45

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ரயிலில் தவறவிட்ட 46 பவுன் தங்க நகையை ரயில்வே போலீசார் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர். 

சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் சரவணன் (38). இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து குடும்பத்துடன் கன்னியாகுமரி விரைவு ரயிலில் வந்து கொண்டிருந்தார். இன்று காலை நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய நிலையில், அவர் வைத்திருந்த கைப்பையினை ரயிலில் தவறி விட்டது தெரிய வந்தது.

3

அந்த பையில் 46 பவுன் தங்க நகை இருந்ததால் அதிர்ச்சிக்குள்ளான சரவணன், உடனடியாக நாகர்கோவில் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். சரவணன் பயணித்த ரயில் கன்னியாகுமரி ரயில் நிலையம் சென்றுவிட்ட நிலையில், நாகர்கோவில் ரயில்வே போலீசார் அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், ரயில் பெட்டிக்குள் கேட்பாரற்று கிடந்த பையை மீட்டு பார்த்தபோது அதில் 46 பவுன் தங்க நகை இருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, அந்த நகையை ரயில்வே போலீசார் மீட்டு நாகர்கோவில் ரயில்வே காவல் நிலையத்தில் வைத்து சரவணனிடம் ஒப்படைத்தனர்.  தவறவிட்ட நகையை பத்திரமாக மீட்டு ஒப்படைந்த ரயில்வே போலீசாருக்கு, சரவணன் மகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்துக் கொண்டார்.