வீடு வீடாக கொரோனோ தடுப்பூசி செலுத்த எதிர்ப்பு... ஈரோட்டில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!

 
protest

ஈரோட்டில் வீடு வீடாக கொரோனோ தடுப்பூசி செலுத்துவதை ரத்து செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

protest

அப்போது,  கிராமங்களில்  வீடு வீடாக சென்று கொரோனோ தடுப்பூசி செலுத்துவதை ரத்து செய்ய வலியுறுத்தியும், வாரம் ஒரு நாள் சனிக்கிழமை போன்ற  வேலை நாட்களில் மட்டுமே கொரோனா தடுப்பூசி  முகாம் நடத்திடவும் கோரி முழக்கமிட்டனர். மேலும், வாரத்தின் அனைத்து நாட்களும் தடுப்பூசி முகாம் நடைபெறுவதால் தாய் - சேய் நலம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய செவிலியர்கள், கொரோனோவுக்கு இலக்கு நிர்ணியிப்பதை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அத்துடன், இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு போன் செய்ய சொல்வதை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் சென்னையில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். செவிலியர்கள் போராட்டம் காரணமாக ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.