திருவாரூரில் வரும் டிச.3-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவிப்பு!

 
thiruvarur collector

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தும் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

thiruvarur

இந்த முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனை துறைகளை போன்ற பல்வேறு துறைகளை  சார்ந்த 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இத்தனியார் துறை முகாமில் 8ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ வரை கல்வித்தகுதி உடைய 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்துகொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால் திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிவாய்ப்பு பெற்றால், தங்களது வேலைவாய்ப்பக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.