நாகையில் ஆட்டோ மீது தனியார் பேருந்த மோதல் - ஆட்டோ ஓட்டுநர் பலி!

 
accident

நாகையில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் நாகூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகை மாவட்டம் நாகூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகபர் சாதிக். ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று காலை வேளாங்கண்ணிக்கு சவாரி சென்றுவிட்டு தனது ஆட்டோவில் நாகூருக்கு திரும்பி கொண்டிருந்தார். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடுத்த பால்பண்ணைச்சேரி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே திடீரென மாடு ஒன்று வந்தது. இதனால் மாட்டின் மீது மோதாமல் தவிர்க்க ஜெகபர் சாதிக் முயற்சித்த போதும், மாட்டின் மீது ஆட்டோ மோதியது.

nagai

இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோவின் மீது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த ஜெகபர் சாதிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த  போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாகை நகர சாலைகளில் கால்நடைகள் சுற்றுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.