நடிகர் சூர்யாவை கண்டித்து ஈரோட்டில் பா.ம.க-வினர் ஆர்ப்பாட்டம்!

 
surya

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகம் குறித்து அவதூறு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக கூறி நடிகர் சூர்யாவை கண்டித்து ஈரோட்டில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில், வன்னியர் சமூக குறித்து அவதூறு பரப்பும் விதமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குவினர் மீது நடவடிக்கை எடுக்க பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், நடிகர் சூர்யா மன்னிப்புக்கோர வலியுறுத்தி பாமகவினர் தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

surya

இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடிகர் சூர்யாவை கண்டித்து வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட மாநில துணை பொதுச்செயலாளர் தா.ப. பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், பாமக மாவட்டச் செயலாளர்கள் பிரபு, ராசு, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பெருமாள், பா.ம.க மாநில செயற்குழு உறுப்பினர் பொ.வை.ஆறுமுகம், ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வன்னியர் சமூகம் குறித்து அவதூறு பரப்பிய விவகாரத்தில் நடிகர் சூர்யாவை கைதுசெய்ய வலியுறுத்தியும், பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாசிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.