பிளஸ் 2 மாணவி தற்கொலை... ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

 
cbe protest

கோவையில் பிளஸ் 2 மாணவி தற்கொலை விவகாரத்தில் பாலியல் புகாருக்குள்ளான தனியார் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி பொன்தாரணி என்பவர் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி முன்னதாக படித்த தனியார் பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லை காரணமாக  மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி, அவரது பெற்றோர் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

cbe

இந்த நிலையில்,  மாணவியின் தற்கொலைக்கு  காரணமாக தனியார் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு, மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கை எழுப்பினர்.

மேலும், புகாருக்கு உள்ளான ஆசிரியரின் புகைப்படத்தை கிழித்தெறிந்தும் செருப்பால் தாக்கியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக புகாருக்கு உள்ளான தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.