பிளஸ் 2 மாணவி தற்கொலை... குற்றவாளியை கைது செய்யக்கோரி கரூர் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

 
karur

பாலியல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த 19ஆம் தேதி பாலியல்  தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதிவைத்து விட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இதுகுறித்து புகார் அளிக்க காவல் நிலையம் சென்ற மாணவியின் உறவினர்களை தாக்கி துன்புறுத்தியதாக வெங்கமேடு காவல்நிலைய ஆய்வாளர் கன்னதாசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

karur

இந்த நிலையில், மாணவி தற்கொலை விவகாரத்தில் குற்றவாளியை விரைந்து கைது செய்யவும், மாணவி படித்த தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, கரூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் வகுப்புகளை புறக்கணித்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாலியல் புகார்  தொடர்பாக தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மாணவியின் உறவினர்களை தாக்கிய காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மீது நடவடிக்கை எடுக்கவும், பாலியல் புகார் குறித்து விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கவும் வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

karur

தொடர்ந்து, கல்லூரியில் இருந்து பேரணியாக புறப்பட்டு சென்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரை சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க முயன்றனர். அப்போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, பிளஸ் 2 மாணவி தற்கொலை விவகாரத்தில்  விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும், அதேபோல் விசாகா கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஆட்சியர்  உறுதி அளித்தார். அதனை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.