கால்நடைகள் சாலைகளில் சுற்றினால் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்... திருச்சி மாநகராட்சி அதிரடி!

 
trichy

போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் தெருக்கள், சாலைகளில் சுற்றித்திரிந்தால், அவற்றின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும், பொது சுகாதாரத்திற்கும் கேடு ஏற்பட்டு வருவதை தொடர்ந்து, இதனை தடுக்கும் பொருட்டு, கால்நடைகளை வளர்க்கும் நபர்கள் தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை தங்களது வளாகத்திற்குள்ளேயே கட்டி வைத்து சுகாதார முறைப்படி வளர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

trichy

அவ்வாறில்லாமல் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் தெருக்களிலிலோ, சாலைகளிலோ சுற்றித்திரியும் கால்நடைகளை மாநகராட்சி மூலம் பிடித்து செல்வதோடு முதன் முறையாக ரூ.10 ஆயிரம் அபராதத்தினை 3 நாட்களுக்குள் செலுத்தி சம்பந்தப்பட்ட கால்நடையின் உரிமையாளர் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு உரிமையாளர் பெற்றுக்கொள்ளாவில்லை எனில், மாநகராட்சி அருகில் உள்ள கால்நடை சந்தையில் விற்பனை செய்து அத்தொகை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.