அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு... திமுக எம்.பி ஆ.ராசாவை சந்தித்து விவசாயிகள் மனு!

 
a raja

கோவை மாவட்டம் அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து,800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குப்பனூர், அக்கரை செங்கப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அன்னூரில் 4 வருவாய் கிராமங்கள், மேட்டுப்பாளையம் வட்டத்தில் 2 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள சுமார் 1,504 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசின் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, கடந்த 1ஆம் தேதி 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

farmers

அப்போது, அன்னூர் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் சுமார் 50 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது என்றும், தங்களின் 70 ஆண்டு கால கனவுத்திட்டமான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தினால் வாழ்வில் ஒரு புதிய வசந்தம் வருமென நினைத்திருந்த சூழலில், விவசாயிகளின்  நிலம் கையகப்படுத்துதல் என்பதற்கான முயற்சி தங்களை சோர்வடைய செய்துள்ளது. விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்ற தீர்மானம் 5 ஊராட்சிகளில் நிறைவேற்றப்பட்டு ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுசென்றனர்..

 மேலும், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டதுடன், விவசாயிகள் நிலம் கையகப்படுத்த மாட்டாது என்றும், தொழிற்பேட்டை திட்டம் ரத்து என்ற சட்டப்பூர்வமான அறிவிப்பு அரசு வெளியிட தாங்கள் ஆவன செய்ய உத்தரவு வழங்க வேண்டுமென கூறி, மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து அந்த பகுதி விவசாயிகள் மனு அளித்தனர். தொடர்ந்து, நடந்த பேச்சுவார்த்தையில் வரும் 15ஆம் தேதிக்குள் அரசின் உயர் அதிகாரிகளுடன் பேசி, நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். 

farmers

இந்த நிலையில், அன்னூர் பகுதியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள், நீலகிரி தொகுதி திமுக எம்.பி. ஆ.ராசாவை நேரில் சந்தித்து இந்த பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனர். அவர்களிடம் மனுவை பெற்றுக்கொண்ட எம்.பி ராசா கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். வரும் 16ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளதாகவும், அப்போது, அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்கும் எண்ணத்தை அரசு கைவிடா விட்டால் போராட்டம் தொடரும் என்றும் விவசாயிகள் முடிவெடுத்து உள்ளனர்.