ஈரோடு அருகே ஆம்னிவேன் - லாரி நேருக்கு நேர் மோதல்... 4 பெண்கள் உள்பட 5 பேர் பலி!

 
ACCIDENT

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே ஆம்னிவேன் மீது சிமெண்ட் லாரி மோதிய விபத்தில் 4 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் அடுத்துள்ள முத்துக்கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த 8 பேர் திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு, ஆம்னிவேனில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே குமாரவலசு பகுதியில் வந்தபோது ஆம்னிவேன் மீது எதிர்பாராத விதமாக எதிரே சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மொடக்குறிச்சியை சேர்ந்த கார் ஓட்டுநர் படையப்பா  மற்றும் முத்துக்கவுண்டனூரை சேர்ந்த தெய்வானை, மஞ்சுளா, அருக்காணி மற்றும் தேன்மொழி  ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் மூன்று பேர் ஒரே குடும்பத்தினர் என கூறப்படுகிறது.மேலும், படுகாயமடைந்த முத்துசாமி, குமரேசன் உள்ளிட்ட 3 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ERODE

தகவல் அறிந்து வந்த சிவகிரி போலீசார், உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிமெண்ட் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, அந்த பகுதியில் குறுகிய சாலையாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதாகவும், இதனால் சாலையை அகலப்படுத்தி, வேகத்தடை அமைக்க வலியுறுத்தி அந்த கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட ஏஎஸ்பி மற்றும் டவுன் டிஎஸ்பி மோகனசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.