திருச்சி அருகே இளைஞர் மர்ம மரணம்... கொலையா? என போலீசார் விசாரணை!

 
dead

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே பட்டதாரி இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விவசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள மேலமாங்காவனத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. விவசாயி. இவரது மகன் பாண்டியராஜன் (25).  வௌிநாட்டில் பணிபுரிந்து வந்த இவர், சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பி விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் கோட்ராப்பட்டியில் உள்ள தனது நெல் வயலை பார்ப்பதற்காக பாண்டியராஜன் சென்றுள்ளார். அப்போது, அவரது வயலில் ஆடு ஒன்று இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. 

trichy

இதுகுறித்து ஆட்டின் உரிமையாளரான கோட்ராபட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது உறவினர்கள் பாண்டியராஜன் ஆட்டை அடித்து கொன்றுவிட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு,அவரை தாக்கி உள்ளனர். இதுகுறித்து பாண்டியராஜன் அளித்த புகாரின் பேரில் விசாரித்த துவாக்குடி போலீசார், இருதரப்பினரையும் அழைத்து சமரசம் பேசி, வழக்குப்பதியாமல் உயிரிழந்த ஆட்டிற்கு இழப்பீடாக பாண்டியராஜனிடம் ரூ.8 ஆயிரத்தை பெற்று சுப்பிரமணியிடம் வழங்கி உள்ளனர்.

இந்த நிலையில், பாண்டியராஜன், கோட்ராப்பட்டி ரயில்வே தண்டவாளத்தின் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த துவாக்குடி போலீசார், உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஆடு பிரச்சினையில் தனது மகனை சுப்பிரமணியன் தரப்பினர் அடித்துக்கொன்றதாக கூறி, மாரியப்பன் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.