உத்தமபாளையம் அருகே வயதான தம்பதி படுகொலை - மர்மநபர்கள் வெறிச்செயல்!

 
murder

உத்தமபாளையம் அருகே வயதான தம்பதியை கைகளை கட்டிப்போட்டு தலையணையால் அமுக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள அனுமந்தன்பட்டி வண்ணார் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (75). சலவை தொழிலாளி. இவரது மனைவி சிவகாமியம்மாள்( 70 ). இவர்களுக்கு 6 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். பிள்ளைகள் அனைவரும் திருமணமாகி, கேரளாவில் பல்வேறு இடங்களில் துணி தேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். அவ்வப்போது வந்து பெற்றோரை பார்த்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை நீண்டநேரமாகியும் கருப்பையாவின் வீடு பூட்டிக் கிடந்துள்ளது. 

theni

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அவர்களுடைய உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், அவரது பிள்ளைகள் வீட்டை உடைத்துச்சென்று பார்த்தபோது கருப்பையாவும்,  அவரது மனைவி சிவகாமி அம்மாள் ஆகியோர் துண்டால் கைகளை கட்டிப்போட்ட நிலையிலும், கருப்பையா தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார், தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தகவல் அறிந்த  தேனி மாவட்ட எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்ரே சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டார்.  இந்த சம்பவம் குறித்து உத்தமபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.