குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி!

 
poison

சத்தியமங்கலம் அருகே கணவர் இறந்த வேதனையில் 3 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ரமேஷ் (32). பெயிண்டர். இவரது மனைவி மாலினி (29). இவர்களுக்கு 3 வயதில் தமிழினியா என்ற மகள் உள்ளார்.  ரமேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார். இதனால், மாலினி தொப்பம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் தனது திருமண நாளையொட்டி, மாலினி, குழந்தை தமிழினியாவை அழைத்துக்கொண்டு அகதிகள் முகாமில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். 

erode

கணவர் இறப்பால் மனவேதனையில் இருந்து வந்த மாலினி, தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து  குளிர்பானத்தில் சாணிப்பவுடரை கலந்து குழந்தை தமிழினியாவுக்கு கொடுத்து விட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குழந்தை தமிழினியாவை சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், மாலினியை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

பின்னர், தமிழினியா மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.