ஈரோட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை துவங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி!

 
muthusamy

ஈரோட்டில் 1,159 ரேஷன் கடைகள் மூலம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன், வேட்டி - சேலை விநியோகம் செய்யும் பணியை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சி என 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யும் பணி தொடங்கியது. சென்னையில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஈரோட்டில் கருப்பணன் வீதியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை விநியோகிக்கும் பணியை தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

pongal package

பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பொங்கல் பண்டிகையும் மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் முதலமைச்சர் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இன்று தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, 7 லட்சத்து 39 ஆயிரத்து 771 அரிசி கார்டுதாரர்கள், இலங்கை தமிழர்களின் ரேஷன் கார்டு, ஆயிரத்து, 381 என 7 லட்சத்து, 41 ஆயிரத்து, 153 கார்டு தாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு 1,159 ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படுகிறது.

இத்துடன் இலவச வேட்டி, சேலைகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.7 கோடியே 2 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 10 ஆயிரத்து 198 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி சிவக்குமார், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

pongal package

பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்று பெண்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். துணிப்பை உடன் அவர்களுக்கு 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகள் மற்றும் இலவச ,வேட்டி சேலைகள் விநியோகிக்கப்பட்டன. ரேஷன் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் கோடு போடப்பட்டிருந்தது. பொது மக்கள் வரிசையில் நின்று பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுச் சென்றனர். வரும் 31ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. நாளொன்றுக்கு டோக்கன் அடிப்படையில் 150 முதல் 200 பேர் வரை வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.