குடகனாறு வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட கிராமத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு

 
kudaganar

திண்டுக்கல் மாவட்டத்தில் குடகனாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட ஆத்துப்பட்டி கிராமத்தை, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம்  குடகனாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தாடிக்கொம்பு  பேரூராட்சிக்குட்பட்ட ஆத்துப்பட்டி கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மழைநீர் சூழ்ந்துகொண்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இன்று காலை அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது,  திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

குடகனாறு, சந்தானவர்த்தினி ஆறு மற்றும் வரட்டாறு ஆகிய 3 ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்  ஆத்துப்பட்டி கிராமத்தை சுற்றி மழைநீர் தேங்கி உள்ளது. ஆத்துப்பட்டி மற்றும் விட்டல் நாயக்கன்பட்டி இடையே சிறியதாக அமைக்கப்பட்ட தரைப்பாலம் மூழ்கி, குழாய்கள் சேதமடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. ஆத்துப்பட்டி கிராமத்தை சுற்றி 3 பக்கமும் ஆறுகள் உள்ளதாலும், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் கிராமத்தை சுற்றி மழைநீர் சூழ்ந்து விடுவதால் இந்த நிலை ஏற்படுகிறது.

dindigul

பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் கடந்த 50 ஆண்டுகளாக இந்த பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் மழைநீர் தேங்கிவிடுவதால் பொதுமக்கள் 2 மாதங்கள் வரை கிராமத்தை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை கடந்த 10 ஆண்டு கால  ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆத்துப்பட்டி பகுதியில் 300-க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இங்கு பாலம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் விசாகன்,  கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தினேஷ்குமார், திண்டுக்கல் கோட்டாட்சியர் காசிசெல்வி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கடரமணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.