பங்குச்சந்தையில் நஷ்டம் - இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

காஞ்சிபுரம் அருகே பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் கே.ஒன்னிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் சந்திரசேகர்(30). இவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து பணம் சம்பாதித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நாகவேணி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாகவேணி, தனது குழந்தைகளுடன் மதுரைக்கு சென்றிருந்தார்.

 suicide

மேலும், அன்றிரவு அழகர்சாமி வேலை காரணமாக சென்னைக்கு சென்று விட்டு நேற்று காலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது, வீடு உட்புறமாக பூட்டப்பட்டு கிடந்தது. கதவை நீண்டநேரமாக தட்டியும், சந்திரசேகர் திறக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அழகர்சாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்தார். அப்போது, சந்திரசேகர் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அழகர்சாமி கதறி அழுதார்.

தகவல் அறிந்த ஒரகடம் போலீசார், சந்திரசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அழகர்சாமியின் புகாரின் பேரில் ஒரகடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சந்திரசேகர் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டு வந்ததும், நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.