உத்தமபாளையத்தில் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் வெட்டிக்கொலை!

 
murder

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞரை வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் கூடலூர் நகரை சேர்ந்தவர் வீரனை தேவர். இவரது மகன் மதன்குமார் (30). இவர் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இன்று மதியம் மதன்குமார் தனது இருசக்கர வாகனத்தில் உத்தமபாளையம்  சந்தை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த 4 பேர் கும்பல் வழக்கறிஞர் மதன்குமாரை வழிமறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டினர்.

theni

இதில் பலத்த காயமடைந்த மதன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து, கொலையாளிகள் அங்கிருந்து தப்பியோடினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கொலையான மதன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, மதன் குமாருக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து தகராறு இருந்து வருவது தெரியவந்தது. இதுதொடர்பான மோதலில் கடந்தாண்டு ரஞ்சித் என்பவர் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், அதற்கு பழிவாங்கும் விதமாக மதன்குமார் படுகொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.