5-வது முறையாக பர்கூர் மலைப் பாதையில் மண்சரிவு... தமிழகம் -கர்நாடகா இடையே மீண்டும் போக்குவரத்து பாதிப்பு!

 
bargur

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததால் தமிழகம் - கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதை தமிழக - கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது. இந்த வழியாக தான் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த  நிலையில், அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில்  பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப் பாதையில் கடந்த மாதத்தில் 2 முறையும், கடந்த 8ஆம் தேதியும் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்து, பல மணி நேரம் தமிழகம்- கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதற்கிடையே, நேற்று முன்தினம் 4-வது முறையாக  அதிகாலை செட்டிநொடி என்ற இடத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் சரிந்து விழுந்து, சுமார் 14 மணநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனரக வாகன போக்குவரத்திற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று 5-வது முறையாக மீண்டும் பர்கூர் மலைப்பகுதி செட்டி நொடி என்னும் இடத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு, 50 அடி நீளத்திற்கு சாலை பெயர்ந்து, பள்ளத்தாக்கில் சரிந்து விழுந்தது. 

bargur

உடனடியாக மலைப் பகுதியில் மீண்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இதனால் தமிழகம் கர்நாடகம் இடையே மீண்டும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு பர்கூர் போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மண்சரிவு ஏற்படாத வகையில் தடுப்புகள் அமைத்து சிறிய ரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு மட்டும் போக்குவரத்து தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பஸ், லாரிகள், கனரக வாகனங்களுக்கு தொடர்ந்து போக்குவரத்திற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள 32 கிராம மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். 

மழைக்காலம் முடியும் வரை இந்த பகுதியில் பஸ், லாரி, கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு இடங்களில் சிறிய சிறிய பாறைகளும், மரங்களும் சாலையோரமாக கிடைக்கின்றன. பள்ளத்தாக்கில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதை எவ்வாறு சீர் செய்வது என்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்ற பிறகு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.