நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு போராட்டம்

 
3

நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு சார்பில் இன்று நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக 6 ஆயிரத்துக்கும் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.

திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப் பொருளான நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஆடை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதனால், வரலாறு காணாத நூல் விலை உயர்வை கண்டித்து, மத்திய அரசு பஞ்சு, நூல் ஏற்றுமதியை உடனடியாக ரத்து செய்யவும் வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு பின்னலாடை துறை சார்ந்த அனைத்து சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், வணிகர் சங்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். 

32

இந்த போராட்டத்துக்கு தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா), திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா), திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் சங்கம், நூல் வியாபாரிகள் சங்கம், விசைத்தறி ஜவுளி உற்பத்தி யாளர் சங்கம் உள்ளிட்ட 116 சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. அதன்படி, திருப்பூரில் இன்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டன. அதேபோல், பனியன் தொழில் சார்ந்த நிறுவனங்களான சாயப்பட்டறைகள், பிரிண்டிங், ஜாப் ஒர்க் உள்ளிட்ட நிறுவனங்களும் அடைக்கப்பட்டன.  

சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் அடைக்கப்பட்டு உள்ளதால், சுமார் 100 கோடி மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து திரையரங்கங்கள் செயல்பட வில்லை. இதனிடையே, நூல் விலையை கட்டுப்படுத்த கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே பின்னலாடை தொழில் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. 

2

இதில் பின்னலாடை உற்பத்தி சங்கங்கள் உள்பட 116 சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று நூல் விலை உயர்வை கண்டித்தும், பருத்தி பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், இந்திய பருத்தி கழகம் வர்த்தகர்களுக்கு பஞ்சு விற்பனை செய்யக்கூடாது என்றும், பஞ்சு இறக்குமதி வரியை நீக்கவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அத்துடன், தமிழக அரசு பருத்தி கொள்முதல் மையத்தை உருவாக்கி நூற்பாலைகளுக்கு சீரான விலைக்கு பஞ்சு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்,