பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் சடலம் வீச்சு... கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு!

 
dead body

ஈரோட்டில் பெண்ணை கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி காலிஇடத்தில் வீசிச்சென்ற மர்மநபர்களை பிடிக்க டவுன் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு அருகே உள்ள ரங்கம்பாளையம் கே.கே.நகர் லட்சுமி கார்டன் குடியிருப்பு பகுதியில் ஒரு காலி இடத்தில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. அந்த சாக்கு மூட்டையில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது 45 வயது மதிக்கத்தக்க பெண் உடல் காயங்களுடன் இருந்தது. அந்தப் பெண்ணின் கை, கால்கள் மடக்கிய நிலையில், அந்தப் பெண்ணின் முகம் பிளாஸ்டிக் கவர் மூலம் கட்டப்பட்டு இருந்தது. 

police

இதைத் தொடர்ந்து, போலீசார் அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். 2 நாட்களாக அந்த பகுதியில் சாக்கு மூட்டை இருந்ததால் பெண்ணின் உடல் உப்பி போய் இருந்தது. கூடுதல் எஸ்.பி., பாலாஜி, டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். கொலையுண்ட பெண் வேறு எங்கேயோ கொலை செய்யப்பட்டு, இந்த இடத்தில் கொலையாளிகள் உடலை வீசி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. கொலையுண்ட பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. பெண் உடல் கிடந்த பகுதி அருகே வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொலையாளிகளை கண்டுபிடிக்க டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இதில், வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன், சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயா, மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் இந்த தனிப்படையில் உள்ளனர். இவர்கள் கொலையுண்ட பெண் அடையாளம் காணும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையம், அருகே உள்ள சேலம் ,கரூர், கோவை, நாமக்கல், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் காணாமல் போன பெண்களின் விவரங்கள் குறித்து சேகரித்து வருகின்றனர்.