பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க ஜே.பி.நட்டா கோவை வருகை... உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்!

 
jb natta

திருப்பூரில் நடைபெறும் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
திருப்பூர் லட்சுமி கல்யாண மண்டபத்தில் இன்று தமிழக பாஜக மாநில செயற்குழு கூட்டம் அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற உள்ளது. தொடர்ந்து, திருப்பூரில் கட்டப்பட்டு உள்ள புதிய கட்சி அலுவலகத்தை ஜே.பி.நட்டா திறந்துவைக்க உள்ளார்.இந்த நிகழ்ச்சியில், கலந்து கொள்வதற்காக ஜே.பி.நட்டா டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்தடைந்தார்.

natta

அவருக்கு பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் மலர் தூவி பா.ஜ.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, திறந்த வாகனத்தில் இருந்தபடி தொண்டர்களின் உற்சாக வரவேற்பை  ஏற்றுக்கொண்ட ஜே.பி.நட்டா பின்னர் கார் மூலம் திருப்பூர் புறப்பட்டு சென்றார். திருப்பூரில் நடைபெறும் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கும், அவர் உள்ளாட்சி தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீட்டில் கேட்க வேண்டிய இடங்கள் குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.

natta

மாலையில் திருப்பூர் வடக்கு பாஜக புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் ஜே.பி.நட்டா, அங்கிருந்தவாறு ஈரோடு, நெல்லை, வாணியம்பாடி ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்ட கட்சி அலுவலங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். தொடர்ந்து, மாலையில் திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். உள்ளாட்சி தேர்தலுக்கு தொண்டர்களை தயார் படுத்தும் விதமாக ஜே.பி.நட்டாவின் இந்த பயணம் அமையும் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.