ஜெய்பீம் திரைப்படம் - எலி, பாம்புகளுடன் வந்து சூர்யாவுக்கு நன்றி கூறிய பழங்குடியினர்

 
mdu surya

ஜெய்பீம் திரைப்படத்தில் பழங்குடியின மக்களின் பிரச்சினைகளை காட்சிப்படுத்தியதற்காக நடிகர் சூர்யாவுக்கு, மதுரை மாவட்ட பழங்குடியின மக்கள், பாம்பு மற்றும் எலிகளுடன் வந்து நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

நடிகர் சூர்யா நடிப்பில் ஞானவேல் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் வன்னியர் சமூகம் குறித்து அவதூறு பரப்பும் விதமாக அமைந்துள்ளதாக கூறி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனால் நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில்,  ஜெய்பீம் திரைப்படத்தின் ஆக்கத்தில் உள்நோக்கம் ஏதுமில்லை எனவும், அவ்வாறு யாரேனும் படத்தினால் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குநர் ஞானவேல் ராஜா தெரிவித்து இருந்தார்.

tribal

இந்த நிலையில், பழங்குடியின மக்களின் பிரச்சினைகளை ஜெய்பீம் படத்தில் காட்சிப்படுத்தியதற்காக நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, மதுரையை சேர்ந்த பழங்குடியின மக்கள் சங்கத்தினர் பாம்பு மற்றும் எலிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். காட்டுநாயக்கன் நாடோடி இனக்குழுக்கள், காட்டுநாயக்கன் நாடோடி இனக்குழு சட்ட அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு, பழங்குடியின மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்ததற்காக நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்.

அத்துடன், தமிழகம் முழுவதுமுள்ள பழங்குடியின மக்களுக்கு சாதிச்சான்று, வீட்டுமனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உத்தரவு பிறப்பித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து இதுதொடர்பான முதல்வரின் உத்தரவை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவையும் பழங்குடியின மக்கள் வழங்கினர்.