ஜெய்பீம் பட விவகாரம் - நடிகர் சூர்யா மீது பெரம்பலூர் எஸ்.பி அலுவலகத்தில் பாமக சார்பில் புகார்!

 
surya

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகம் குறித்து அவதூறாக காட்சிகள் அமைத்ததாக கூறி நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பாமக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகம் குறித்து அவதூறாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் கடும்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் பாமகவினர், நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையங்களில் புகார் அளித்தும் வருகின்றனர்.

surya

இதன் ஒரு பகுதியாக, பெரம்பலூர் மாவட்ட பாமக செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு மாவட்ட கூடுதல் எஸ்.பி ஆரோக்கிய பிரகாஷை சந்தித்து, புகார் ஒன்றை அளித்தனர். அந்த மனுவில்,ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் புனித அடையாளமான அக்னி கலசத்தை காட்சிப்படுத்தி, வன்னியர் சமுதாயத்தை எதிர்மறையாக காட்டி ஒட்டுமொத்த சமுதாய மக்களை தவறாக காட்சி படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், சகோதரத்துவத்துடன் உள்ள இருளர் - வன்னியர் சமூகம் இடையே வன்மத்தை தூண்டி, கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக படத்தை தயாரித்த ஜோதிகா, நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில்  கூறப்பட்டு உள்ளது.